Friday, 28 November 2014

தாராசுரம், ஸ்ரீ ஞானாம்பாள் சமேத ஸ்ரீ ஐராவதீஸ்வரர் திருக்கோவில்

                                               

                                  வக்ரதுண்ட  மஹாகாய  சூர்யகோடி சமப்ரப
                                  அவிக்னம்  குருமேதேவ  சர்வகார்யேஷு  சர்வதா!!

           19:- தாராசுரம்:-

       ஈஸ்வரன் பெயர்:- ஸ்ரீ ஐராவதீஸ்வரர்.
    அம்பாள் பெயர்:-  ஸ்ரீ ஞானாம்பாள்,ஸ்ரீ பெரியநாயகி
           (ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு தனிக்கோவில் உள்ளது.)

                        தாராசுரம் கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சோழர் காலத்தில் இதன் பெயர் பழையாறை.இரண்டாம் ராஜராஜசோழன் இக்கோவிலை கட்டியதாகக் கூறுகின்றனர்.முதலாம் ராஜராஜசோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தன் தலைநகரமாகக்கொண்டிருந்ததாகவும், இரண்டாம் ராஜராஜ சோழன் பழையாறையை தன் தலைநகரமாக மாற்றிக்கொண்டதாகவும் வரலாறு உள்ளது. தன் முன்னோர்கள் கட்டிய கங்கைகொண்டசோழபுரம், தஞ்சை ஸ்ரீ பிருஹதீஸ்வரர் ஆலயம்போன்று தானும் தாராசுரத்தில் மிகவும் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு கோவிலை கட்டவேண்டும் என்ற ஆவலுடன் இக்கோவிலை கட்டினாராம்.இக்கோவில் ராஜராஜேச்சுரம்  எனவும் ராஜராஜபுரம் எனவும் அழைக்கப்படுகின்றது.
                                           

கோவிலின்வாயில்
                             
கோவிலின் பக்கவாட்டு தோற்றம்

        
       
         
      

ஸ்ரீஅர்த்த்னாரீஸ்வரர்
கோவிலின் முன் புறத்தோற்றம்

சப்தஸ்வர படிகள்
பரந்து விரிந்த புல்வெளி

n




              , 












மிகப்பெரிய புல்வெளியும்மரங்களும் நிறைந்த அழகான இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. தரையை விட்டு நான்கு அல்லது ஐந்து படிகள் கீழே இறங்கி சென்றால் பலிபீடம், நந்திகேஸ்வரரைக் கடந்து,கோவிலுக்குள் செல்லவேண்டும்.அவ்விடத்திலேயே சப்தஸ்வரங்களை இசைக்கும் ஏழுபடிகள் உள்ளன.அவற்றை இரும்பு கிராதி அமைத்து பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.கோவிலுக்கு வரும் சிறுவர்கள் அப்படிகளில் விளையாட்டாக ஏறி இறங்குவதைத்தடுக்க இந்த ஏற்பாடாகும்.

                       கோவிலின் உள்ளே சென்றால் துவாரபாலகர்களாக சங்கநிதியும் பதுமநிதியும் காணப்படுகின்றார்கள். இந்திரனின் வாகனமாகிய வெண்மை நிற யானை ஐராவதம்  ஒருசமயம்  துர்வாஸமுனிவரால் ஏற்பட்ட சாபத்தால் தன் வெண்மை நிறம் மாறி துன்பப்பட்டபோது இந்ததலத்தில் உள்ள குளத்தில் நீராடி,சிவனை வழிபட்டு  தன்வெண்மைநிறத்தை மீண்டும் அடைந்த்தாம்.அதனால் இங்குள்ள இறைவனும் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் என அழைக்கப்பட்டதாக வரலாறு.எமதர்மராஜாவும் ஒருசமயம் முனிவரின் சாபத்தால் தன் உடல் முழுவதும் மிகுந்த எரிச்சலையும் வேதனையையும் அனுபவித்து,பின்னர் இங்குள்ள குளத்தில் நீராடி வேதனைகள் நீங்கப்பெற்றாராம் அதனால்  இங்குள்ள தீர்த்தம் யமதீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.ஸ்ரீ ஐராவதீஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்தோம் மிகவும் அழகுடனும்,கம்பீரமாகவும் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் அருள் புரிகின்றார்.சன்னதியில் நுழையும்போதே வலப்புறத்தில் ஸ்ரீஞானாம்பாள் அம்மனை   தரிசிக்கலாம்.ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு இக்கோவிலின் வடபுறத்தில் தனிசன்னதியுடன்,நீண்டபிரகாரங்களுடன் தனிக்கோவில் 
அமைந்துள்ளது.அதுவும் இந்தகோவிலுடன் இணைந்தேகட்டப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.பாண்டிய மன்னன் மாறவர்மன் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளாராம்..மராட்டிய,விஜயநகர மன்னர் காலத்திய வேலைப்பாடுகளும்  காணப்படுகின்றன                   
                      கங்கைகொண்டசோழபுரம்,தஞ்சை பிருஹதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களைவிட இக்கோவிலில் உள்ள சிற்பவேலைப்பாடுகள் மிகவும் நுட்பமாகவும், மிகுந்த கலைஅம்சத்துடனும் விளங்குகின்றன.இக்கோவில் ஓர் கலைப்பொக்கிஷம் என்றே கூறலாம்.மனிதர்களின் அன்றாட வாழ்வில் நிகழும்சம்பவங்கள்கூடசெதுக்கப்பட்டுள்ளது.மல்யுத்தம்,பரதநாட்டியம்,மேளம், சிவபெருமானின் தாண்டவம்,அவரின் திருமணத்திற்கு தேவகணங்கள் பரிவாரங்களுடன் செல்லும் ஊர்வலம்,ஸ்ரீராமர் மறைந்திருந்து வாலியின் மேல் அம்பெய்யும் சிற்பம்,ராவணன் கைலாய மலையை   தூக்குவது என பலவித சிற்பவேலைபாடுகள் காணப்படுகின்றன.                                                                                                        


ராவணன் கைலாயத்தை தூக்கும் சிற்பம்
கோவிலின் உள்ளே உள்ள மண்டபம்



         

             
                                                                                        
           வீணை இல்லாத சரஸ்வதி,பிக்ஷாடனார், அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களும் காணப்படுகின்றன.  நம் கைவிரல் அளவே உள்ள சிறிய வினாயகர் உருவம்,தற்கால பாணியில் கால்களில் காலணிகள் அணிந்த முனிவர், போன்ற சிற்பங்களைப்பார்க்கவே மிகவும் திகைப்பாக இருந்தது!! கங்கைகொண்டசோழபுரம் கோவில்,தஞ்சை பிருஹதீஸ்வரர் ஆலயம் இவற்றை ஒப்பிடும்போது தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சிறியதானாலும், அங்குள்ள கலைச்சிற்பங்கள் மிகவும் அரியதாகும்!! எங்கு பார்த்தாலும் வெவ்வேறு முத்திரைகளுடன் கூடிய பரதநாட்டிய சிற்பங்களும்,மல்யுத்தம் பற்றிய சிற்பங்களும்,வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவிற்கு காணப்படுகின்றன.கோவிலின் அமைப்பே ஒரு பெரிய தேரின் மேல் இருப்பதுபோன்றுகாணப்படுகின்றது!! மிக அழகாக செதுக்கப்பட்டுள்ள தேர்ச்சக்கரங்களும்,அவற்றை இழுக்கும் குதிரைகளும்,இன்னும் பல மிருகங்களின் சிற்பங்களும் மிகவும்    நேர்த்தியாக அமைந்துள்ளன. சிற்பியின் கற்பனைத்திறனைக்கண்டு மிகவும் வியப்படைந்தோம்!!அதைப்போன்றே தூண்களை தாங்கி நிற்கும் மிருகங்களின் வாலின் அமைப்பு கூட வெவ்வேறு விதங்களில் அமைந்து இருந்ததைக்கண்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது!!பிரகாரத்தில் உள்ள தூண்களின் நான்குதிசையிலும் தரையில் வட்டமாக பள்ளம அமைத்து,எண்ணெயிட்டு  திரிகொண்டு விளக்கு ஏற்றும்படியான அமைப்பையும் காணமுடிந்தது!!  இந்த கோவிலிலும் மழைநீர் சேகரிப்புக்காக தரையில் துவாரங்களை காண முடிந்தது.சிற்பிகளின் கலைநயமும்,கற்பனைத்திறனும் கண்டு ஆச்சரியமும்,பிரமிப்பும் அடைந்தோம் என்றால் மிகையில்லை!!            


தேர்ச்சக்கரம்

வாலி வதம்

              இக்கோவிலும் கங்கைகொண்டசோழபுரம்,தஞ்சை பெரியகோவில்களைப்போல் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் பொறுப்பில் உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நமக்கு வழிகாட்டிகளாகவும் பணியாற்றுகிறார்கள்.அதனால் ஒவ்வொரு சிற்பத்தைப்பற்றியும் நம்மால் அறிய முடிகிறது. மிகவும் அரியதான இக்கோவிலின் சிற்பங்களை கண்டு மகிழ்வதற்காகவே இக்கோவிலுக்கு அயல்நாட்டினரும்,ஆராய்ச்சியாளர்களும் வருகிறார்கள்.திரு.சின்னதுரை என்பவர் எங்களுக்கு கோவிலின் சிறப்புகளைப்பற்றியும்,சிற்பங்களையும் காண்பித்தார்.அவருக்கு நன்றி கூறி விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்.எங்களின் அடுத்த ஊர் பட்டீஸ்வரம்.
வீணை இல்லாத ஸ்ரஸ்வதி

சிற்ப வேலைப்பாடு
விரலளவு பிள்ளையார்
தூணில் காணப்படும் சிற்பங்கள்
சிவ லிங்கத்தில் சிலை
மராட்டிய ஓவியம்
அர்த்தனாரீஸ்வரர், பதுமனிதி
ஸ்ரீஞானாம்பாள்
காலணிகளுடன் முனிவர்
               
சிவதாண்டவம்
                         
   

மேல்விதானம்