
வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப அவிக்னம் குருமேதேவ சர்வ கார்யேஷு சர்வதா!!
9. திருவாரூர்:-
ஈஸ்வரன்:- ஸ்ரீ தியாகராஜர். அம்பாள்:- ஸ்ரீ கமலாம்பாள் மூலவர்:- ஸ்ரீ வன்மீக நாதர் எனும் புற்றிடங்கொண்டான். அம்பாள்:- ஸ்ரீ நீலோத்பலாம்பாள் எனும் அல்லியங்கோதை
நாங்கள் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலை அடைந்தபோது
சாயங்காலம் 6 மணிக்குமேல ஆகிவிட்டது.கமலாலய குளத்தருகே இருந்த நுழைவு வாயில்
வழியாக உள்ளே சென்றோம்.எங்களது இடது பக்கம் ஒரு சன்னிதி தெரிந்தது.கொஞ்சம்
தொலைவில் கோபுரம் தெரிந்தது.எந்த வழியாக சென்றால் ஈஸ்வரனையும்,அம்பாளையும் தரிசிக்கலாம்
என்றே விளங்கவில்லை.அப்பொழுது கோவிலின் உள்பிரகாரத்திலிருந்து ஒருவர்
சைக்கிளில் வந்தார்.அப்படியானால் கோவில்
எவ்வளவு பெரியதாக இருக்கும் என்ற
வியப்பே ஏற்பட்டது.அன்று சனிக்கிழமையாதலால் கோவிலில் அவ்வளவு கூட்டமும் இல்லை.
பகவானே,எங்களுக்கு வழிகாட்ட யாராவது தென்படமாட்டார்களா என
வேண்டிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது நாங்கள் நுழைந்த வாயில் வழியாகவே ஒருவர் கையில்
பிரசாத பாத்திரத்துடனும்,சில மஞ்சள் பத்திரிகைகளுடனும் வந்தார்.எங்கள் அருகில்
வந்து,நீங்கள் ஊருக்கு புதியவரா என
வினவினார். நாங்கள் ஆம் என்றதும், என்னுடன் வாருங்கள்,உங்களுக்கு வழி காட்டுகிறேன்
என்றார்.அவருடன் நாங்கள் முதலில் சென்றது ஸ்ரீ கமலாம்பாள் சன்னதி.
அம்பாள் ஸ்ரீ கமலாம்பிகை!!
வேறெங்குமே காணக்கிடைக்காத அற்புதமான கோலத்தில் அம்பாள் அமர்ந்திருந்தவிதம் மனதைகொள்ளை
கொண்டதோடு மிக்க வியப்பையும் அளித்தது!
இடது கால் மேல் வலது காலை போட்டுக்கொண்டு அம்பாள் மிக அழகாக அமர்ந்திருந்தாள். இந்தகோலம் ஒரு யோக முத்திரையைக்
காட்டுவதாக கூறினர்.இந்த முத்திரைக்கு பாதுகா குடிகாசனாம்
என்று பெயராம்.இதனை பின் வரும் பாடல் விளக்குகிறது.
த்ரிநேத்ராம் துவிபுஜாம் ஸ்யாமாம் கரண்ட மகுடான்விதாம் யோகாசன சம்யுக்தாம் ஊறு ஹஸ்த சமன்விதாம் நீலோத்பலதராம் தேவீம் பாதுகா குடிகாசனாம் ஏவம் த்யாயேத் பராசக்தீம் அர்ச்யித்வா விசேஷத:
ஸ்ரீ
கமலாம்பிகே சிவே பாஹிமாம் -அம்பா
ஸ்ரீபதி விநுதே ஸிதாஸிதே சிவ ஸஹிதே _ ஸ்ரீ கமலாம்பிகே
ஸ்ரீபதி விநுதே ஸிதாஸிதே சிவ ஸஹிதே _ ஸ்ரீ கமலாம்பிகே
ஸ்ரீ
கமலாம்பாள் சன்னிதி துவஜஸ்தம்பம் அருகில் சுவரில் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்
அருளிய பாடல்கள் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன.அவையனைத்தும் அம்பாள் பெயரில்
இயற்றப்பட்டவையாகும்.ஸ்ரீ கமலாம்பிகை எழுந்தருளி இருக்கும் பீடம், நம் தேசத்தில் உள்ள 51
சக்தி பீடங்களுக்கும் ஆதார
பீடமாகும்! இங்கு ஸ்ரீ கமலாம்பிகையும்
சுயம்புவாக தோன்றியவள்!!ஸ்ரீ
வித்யை என்கிற மந்திர சாத்திரத்தின்
எந்திர நாயகியாவாள்.ஸ்ரீ தியாகராஜர்சன்னிதி வல்லப கணபதியில் தொடங்கும். ஸ்ரீ கமலை சன்னிதி
உச்சிஷ்ட கணபதியில் தொடங்கும்.இந்த
அமைப்பு ஸ்ரீ வித்யா ரகசியம் என்பர். இனி திருவாரூர் கோவில்
பெருமை,ஸ்ரீவீதிவிடங்கர், ஸ்ரீ வன்மீகநாதர்,ஸ்ரீ நீலோத்பலாம்பாள் பற்றி காணலாம்.
திருவாரூர் குளம் 5 வேலி, கோவில் 5 வேலி என்ற பழமொழியொன்றுண்டு.கோவிலும்
குளமும் சேர்ந்து மொத்த பரப்பளவு 33ஏக்கர்!!!!அப்படியென்றால் கோவில் எவ்வளவு
பெரியது என்பது புரியும். திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெருவழகு,
மன்னார்குடி மதிலழகு என்பர். இக்கோவிலில் நித்ய பிரதோஷம். இதர கோவில்களில் தினமும் சாயங்காலம் 4.30 லிருந்து
5.30 மணி வரை பிரதோஷ வழிபாடு. ஆனால் ஸ்ரீ தியாகேசருக்கு சாயங்காலம் திருவந்திக்காப்பு முடிந்த பின்னரே பிரதோஷ
வழிபாடு. ஸ்ரீ வன்மீகநாதர் சுயம்பு லிங்கம்.கரையான் வடிவ புற்றில்
இந்திரன் சிவபாவனை செய்ய,அதில் பெருமான் சுயம்பாக எழுந்தருளினார்.இத்திருவாரூர்
பற்றிய வரலாறு புராணங்களில் பல்வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளன
தியாகராஜ லீலையில், சிவபெருமான் ஒருசமயம். தேவதச்சன் விஸ்வகர்மாவை அழைத்து
பூமண்டலத்தில் நிலையாக தங்கி அருளாட்சி புரிய திருவாரூரில் ஏற்றதொரு பெரியகோவிலை
அமைக்கச்சொன்னாராம்.அதன்படியே அடர்ந்த மூங்கில் காடாக இருந்த இடத்தை சீர்செய்து
புதியநகரம்உருவாக்கப்பட்டதாம்.பல துணைத்தேவர்களுக்குரிய சிற்றாலயங்களுடன்,சிவபெருமானுக்கு
தனிப்பெரும் கூட கோபுரங்களுடன் ஆலயம் அமைக்கப்பட்டதாம்.அவ்வாலயத்தில்
நல்லதொருநாளில் எண்கணங்கள் புடைசூழ, விண்ணவர் மலர்தூவ, வேதகோஷங்கள் முழங்க ஸ்ரீ
தியகராஜர் எனும் வீதி விடங்கர் வேதமேடையில் தோன்றினாராம்.அருகில் ஸ்ரீவன்மீகராக
லிங்க்வடிவிலும் தோன்றினாராம்.மற்றும் பல வித வரலாறுகள் உள்ளன..
ஒருசமயம் திருமால் சிவனை தன் மார்பில் வைத்து
பூஜித்தாராம்.அப்பொழுது சிவன் பாற்கடலின் அசைவுக்கேற்பவும்,திருமாலின் இதய
அசைவுக்கேற்பவும் நடனமாடிட்,அதுவே அஜபா நடனம் ஆனது.திருமால் தான் பலகாலம் பூஜித்த
சிவனை இந்திரனுக்கு கொடுத்தார். இந்திரனை வலன் என்னும் அசுரன் மிரட்ட,அவனுக்கு
சோழர் குல முசுகுந்த சக்ரவர்த்தி உதவினாராம்.அவரை இந்திரன் அழைத்து மரியாதை
செய்யும்போது திருமால் அளித்த லிங்கத்தை அவர் கேட்டதாக வரலாறு.ஆனால் இந்திரன்
அதனைத்தர மனமில்லாமல் மேலும் 6
லிங்கங்க்ள் அமைத்து அவற்றிடையே திருமால் தந்த லிங்கத்தை வைத்தாராம்.ஆனால்
முசுகுந்தன் சரியான லிங்கம் அருகில் சென்றபோது சிவபெருமானே தன்னை அடையாளம் காட்டினாராம்.
அதனால் முசுகுந்த சக்ரவர்த்தி சரியான லிங்கத்தை அடையாளம் காட்டவே, அனைத்து லிங்கங்களையும்
இந்திரன் அவருக்கே அளித்தானாம்.அவையனைத்தும் மரகத லிங்கங்களாகும்.
அந்தத்தலங்கள் அனைத்தும்
சப்தவிடங்கத்தலங்கள்.இதில் முதாலவதும், திருமால் பூஜித்ததுமான லிங்கம்
திருவாரூரில் உள்ளது.அதற்கு தினம் 6 வேளை அபிஷேகம் உண்டு.ஸ்ரீ தியாகராஜர்
சன்னிதியில் அதை வெள்ளிப்பெட்டியில் வைத்துள்ளன்ர்.மற்ற 6 லிங்கங்களும்
திருநள்ளாறு,வேதாரண்யம்,திருக்காரவாசல்,நாகை,திருக்குவளை,திருவாய்மூர் முதலிய
இடங்களில் உள்ளன்.ஸ்ரீ தியாகராஜர் விடங்கர்.அதாவது உளியில் செதுக்கியவரல்லர்.
கொண்டி தேவியுடனும்(சக்தி), கந்தனுடனும் சோமாஸ்கந்தராக
காட்சியளிப்பவர்.உத்சவத்தின்போது தேரில் எழுந்தருள்பவரும் அவரே. திருவாரூரை ஆட்சி
செய்பவரும் அவரே. இருபுறமும் வாள் ஏந்தி தலையில் அம்புலியும், கங்கையும் சூடி
உள்ளார்.மார்கழி திருவாதிரை `நாளிலும்,பங்குனி உத்திரம் அன்றும் பெருமானின் வலது பாதத்தையும்,உமையின் இடது பாதத்தையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.பெருமான்
பாதத்தை ஒரு நாகம் தாங்குவது
போலவும்,அம்பிகையின் பாதத்தை
தாமரை தாங்குவது போலவும்
அமைத்திருப்பர்.இந்நாளில் மட்டும் இவர்களிடையில்
உள்ள கந்தனை காணமுடியும் அவருக்குமுன் நின்றகோலத்தில் செம்பாலான ரிஷபம் உள்ளது.
.மேற்கண்ட படங்களில் திருவாரூர் தேர், பிரகாரம், கோவிலின் நுழைவு வாயில், கமலாலயக்குளம், ஸ்ரீ வன்மீகனாதர், ஸ்ரீ நீலோத்பலாம்பாள் எனப்படும் அல்லியங்கோதையையும் காணலாம்.இவற்றைத்தவிர இந்த தலத்தில் கல் தேரும் விசேஷம்.ஒருசமயம் எமதர்மராஜா நாரதரிடம் உலகில் தன்னைப்போல் தர்மத்தை பாதுகாப்பவர் எவருமில்லை என கர்வமாக சொன்னாராம்.அதற்கு நாரதர் பூவுலகில் மனு நீதி சோழனைப்போல் யாருமில்லை என்றாராம்.அதனை ப்ரிசோதிக்க எண்ணி எமதர்மராஜா,பூவுலகம் வந்து,தான் கன்றுடன் கூடிய பசுவாக மாறி, ம்னு நீதி சோழனின் மகன் வீதிவிடங்கனின் தேர் சக்கரத்தில் தன் கன்று அடிபட்டு வீழச்செய்தானாம்.பிறகு மன்னனிடம் போய் ஆராய்ச்சி மணியை அடித்து பசுவாக இருந்து நியாயம் கேட்டானாம். மன்னன் சிறிதும் பாரபட்சமற்று தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற்தாக வரலாறு.பின்னர் எமதர்மராஜன் சுய உருப்பெற்று மன்னன் மகனையும்,கன்றையும் உயிர்ப்பித்தானாம்.அதனைக்காட்டும் விதமாக கல் தேரும்,சுதைச்சிற்பங்களும் உள்ளன். .இப்படிப்பட்ட ஒரு விசேஷமான கோவிலை தரிசிக்க ஒருநாள் போதாது. இரண்டு முறை திருவாரூர் கோவிலை சுற்றிப்பார்த்தும், ம்னதில் இன்னும் பல முறை தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணமே எழுந்தது. ஸ்ரீ தியாகராஜர் திருமேனி அலங்காரங்கள்,அவரது பின்னலழகு என பல விஷயங்கள் உள்ளன. இன்றும் நாயன்மார் குடும்பத்தினர்தான் அவரை தொட்டு அலங்காரம் செய்கின்றனர். அவர் அழகு தேவரகசியம்! திருவாரூர் பற்றிய இனிய நினைவுகளை மனதில் அசைபோட்டவாறே மறுநாள் திருக்சேறை நோக்கி எங்கள் பயணத்தைத்தொடர்ந்தோம். “ஆரூரன் சன்னிதி போல் ஆரூரன் ஆலயம் போல்,ஆரூரன் பாதத்து அழகுபோல்,ஆரூர் மருவெடுத்த கஞ்சமலர் வாவிபோல்,நெஞ்சே ஒரு இடத்தில் உண்டோ உரை “ என்பது சுவடிப்பாடல்.
No comments:
Post a Comment