Wednesday, 10 September 2014

நாச்சியார்கோவில்


                            வக்ரதுண்ட மஹாகாய  சூர்யகோடி சமப்ரப
         
                          அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேஷு சர்வதா!!                                    


  12.   நாச்சியார்கோவில்:-
            பெருமாள்:-ஸ்ரீ திருநரையூர் நம்பி,ஸ்ரீசீனிவாசப்பெருமாள்                    தாயார்:- ஸ்ரீ வஞ்சுளவல்லி ஸ்ரீ நாச்சியார்.                                                                                                                        

ஸ்ரீ   நாச்சியார், ஸ்ரீ  ஸ்ரீனிவாசப்பெருமாள்



கோவில் கோபுரம்
கோவில் பிரகாரம்
                                                                                                                                                                                          
படிகளுடன் கூடிய உள் பிரகாரம்
   
                   நாச்சியார் கோவிலில் மேதாவி என ஒரு துறவி இருந்தார்.அவர் ஸ்ரீ விஷ்ணு மீது அதிக பக்தி கொண்டிருந்தார். திருமாலை நோக்கி அவர் தவமிருந்தபொழுது அவர் முன் திருமால் தோன்றினார்.அவரிடம் மேதாவி முனிவர், திருமகள் தனக்கு மகளாக பிறக்க வேண்டினார். திருமாலும் அவருக்கு அவ்வரத்தை அருளினார். இச்சமயம் கருடன் திருமாலிடமும் திருமகளிடமும், ராமாயணத்தில் ஸ்ரீ ஹனுமான் சீதையை ஸ்ரீராமரிடம் சேர்த்தது போல் தானும் திருமகளை திருமாலிடம் சேர்த்து வைக்கும் பணியை செய்யவேண்டும் என வேண்டினார்.அதற்கு செவிமடுத்த தாயார்,மேதாவி முனிவருக்கு மகளாக வகுள மரத்தடியில் தோன்றினாள்.முனிவர் அந்தபெண் குழந்தையை வஞ்சுளாதேவி என பெயரிட்டு வளர்த்துவந்தார்.உரிய வயதில் திருமால்,கருடனை, திருமகள் இருக்கும் இடம் அறிந்து வர அனுப்பினார்.  நாச்சியார் கோவிலில்               கருடன்  திருமகளைக் கண்டார். திருமகள் இருக்குமிடம் அறிந்த திருமால், தானே 5 வடிவங்களாக,சங்கர்ஷனன், பிரத்யும்னன், அனிருதன், புருஷோத்தமன், வாசுதேவன்  என வடிவங்களை எடுத்து, முனிவர் வீட்டிற்கு சென்றார். முனிவரும் அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தார். விருந்தினர் கைகழுவும் வேளையில் வாசுதேவன் வஞ்சுளாதேவியின் கைகளைப்பற்றினார். முனிவர் அவரைக் கடிந்துகொள்ள ஸ்ரீமஹாவிஷ்ணு அவர்முன் தோன்றி வஞ்சுளாதேவியை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.மேதாவி முனிவரும் அதற்கு இசைந்து,3 வரம் கேட்டார்.முதல் வரம்  தனக்கு முக்தி அளிக்கவேண்டுமென்றும், இரண்டாவதாக இத்தலத்தை வழிபடுபவர்களுக்கு நற்கதி கிடைக்கவேண்டுமென்றும், மூன்றாவதாக இத்தலத்தில் தனது மகளான ஸ்ரீ வஞ்சுளாதேவிக்கு முன்னுரிமை (முக்கியத்துவம்) அளிக்க வேண்டும் எனவும் வேண்டினார் அதற்கு சம்மதித்த  திருமால் திருமகளை மணந்து கொண்டார். அத்ற்கேற்றாற்போல், கர்ப்பக்கிருகத்தில் ஸ்ரீ நாச்சியார்  திருமாலுக்கு ஓர் அடி முன்னே நிற்பார்.  திருமாலும் திருமகளை கைப்பற்றும் கோலத்தில் இருப்பார்.இவ்வாலயத்தில் திருமாலின்  திருநாமம் ஸ்ரீனிவாசன். தாயார் ஸ்ரீ வஞ்சுளாதேவி. பெருமாள்  திருமங்கை ஆழ்வாருக்கு அருளியதால்  அவரை  திருநறையூர்  நம்பி எனவும் அழைக்கின்றனர். தாயார் ஸ்ரீநாச்சியார் எனப்படுகிறார். திருமால்    ஸ்ரீ வஞ்சுளாதேவியை மணக்கும் முன் எடுத்த 4 வடிவ்ங்களை  பெருமாளுக்கும் தாயாருக்கும் பின்புறம்  காணலாம்.திருமால் முன் பிரம்மாவும்,மேதாவி முனிவரும் இருக்கின்றனர்.
                              
.     
கல் கருட வாகனத்தில் பெருமாளும்
அன்னபக்ஷி  வாகனத்தில்  தாயாரும்
    கல் கருட சேவை
ஸ்ரீ பெருமாளை  சுமக்கும்  கருடன்
                     


கல் கருடன் சன்னதி




















 இங்கு  ஸ்ரீ கருடனுக்கு  தனி சன்னதி  இக்கோவிலில்  கல்கருடன் மிகவும் விசேஷம்
உற்சவகாலங்களில்,அதுவும்  கல்கருடசேவை இக்கோவிலில் மிகவும் பிரசித்தம். ஒவ்வொரு வருடமும் மார்கழி அல்லது தை மாதத்தில்  இக்கோவிலில் கருடசேவை நடைபெறும். கருடன் தன் உடலில் 9 நாகங்களை ஆபரணமாக அணிந்துள்ளார். கருடசேவையின்போது  ஸ்ரீனிவாசப்பெருமாள் கல்கருடன்மீது  எழுந்தருள்வார். தாயார்  அன்னபக்ஷி  வாஹனத்தில்  எழுந்தருள்வார்.கல்கருடனை  முதலில் 4 பேர் சுமப்பார்கள்.பின்னர் சன்னதியிலிருந்து படியிறங்கி  வரும்போது கருடன் சுமை அதிகமாகி  8,16,32,64 என்று  சுமப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். கருடனும் மிக  மெதுவாகவே  ஊர்வலத்தில் செல்வார். கருடனின் முகத்தில் வியர்வைத்துளிகள் தென்படுவது அதிசயமே!! தாயார் அன்னபட்சி வாஹனத்தில்   சுலபமாக முன்னேறிச்செல்வார். இங்கும் பெருமாள்  தாயாருக்கு  முதலிடம் அளிப்பார். ஊர்வலம்  முடிந்து  திரும்பும்போது கருடன் மிகவும்  பளு குறைந்து 32, 16, 8, என்றாகி சன்னதிக்கு வரும்போது 4 பேர்களே சுமந்து வருவார்கள். இத்தலத்தில்  இந்த கருட சேவையைக்காண மக்கள்கூட்டம்  அலைமோதும்.

                      இந்தககோவிலை  சோழப்பேரரசன் கோசெங்கணான் அமைத்ததாக வரலாறு. சோழன் அமைத்த 70 திருத்தலங்களில்  இது ஒன்றே வைணவதிருத்தலம். திருமங்கையாழ்வார்  இந்த பெருமாளின் மீது 110  பாசுரங்கள் பாடியுள்ளார்.இக்கோவில் மணிமுத்தா நதி என்னும் அழகிய குளத்தைக் கொண்டுள்ளது. இது தவிர சங்கர்ஷன,பிரத்யும்ன,அனிருத்த,சாம்ப என 4 தீர்த்தங்களை உடையது. விமானம்  ஸ்ரீனிவாசவிமானம். ஸ்தல விருடசங்கள் வில்வம்,ம்கிழமரம், வகுளமரம். கீழிருந்து  கோவிலை  பார்க்கும்போது, தாயார்தான் நடுநாயகமாகத்தெரிவார். பெண்கள் தங்கள் வீட்டு சாவியை தாயார் மடியில் வைத்து வாங்கிச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கோவிலில் காணப்படும் கருட பக்ஷிகளின் புகைப்படம்
                      
             கர்ப்பக்கிரகத்திற்கு  வலப்புறம் படிகளின் கீழே அனுமான் காணப்படுகிறார்.அவரை வழிபட்டபின் உள்பிரகார சுற்றில், மகிழமரத்தடியில் இரு கருடப்பறவைகளின் புகைப்படம் வைத்து மாடம் கட்டி விளக்கு ஏற்றிவைத்துள்ளனர். தினமும் பூஜை நேரத்தில் அங்கிருந்த மகிழ மரத்தடிக்கு வரும் வழக்கம் கொண்டிருந்த அவ்விரு பறவைகளும், 1999 ம் வருடம் தை மாதம் மகிழ மரத்தடியிலேயே இணையாக உயிர்நீத்தன அவற்றின் நினைவாக மாடத்தில் விளக்கேற்றுகின்றனர். இன்றுவரை அப்பட்சிகளின் வாரிசுகள் வந்து செல்வதாக கூறுகின்றனர். இக்கோவில் திருப்பதிக்கு இணையானது. இதனை மணிமாடக்கோவில் எனவும் அழைக்கின்றனர்.               
 மிகவும்  அழகான பிரகாரங்களுடன்   நாச்சியார் கோவில் கண்களையும், மனதையும் கொள்ளை கொண்டது. ஸ்ரீ பெருமாளுக்கும், தாயாருக்கும்  அர்ச்சனை செய்தோம். ஸ்ரீ கருட பகவானுக்கும் அர்ச்சனை செய்துவிட்டு அங்கிருந்து கும்பகோணத்திற்கு கிளம்பினோம். கும்பகோணத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு ராயாஸ் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தோம்.எங்களது அடுத்த ஊர்  திருபுவனம்.
     

No comments:

Post a Comment